ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அய்யா முருகா ஆடுகவே.
ஆழிப் படுக்கை கொண்டோனின்
அருமை மருகா ஆடுகவே
ஊழி தாண்டி நிற்பானின்
உத்தமச் செல்வா ஆடுகவே
வாழும் மனிதர் யாவருக்கும்
வழிக்குத் துணையாம் வேலவனே
ஆளுங் கவலை ஓடிடவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டே
அதற்கு வயிரக் கயிறுமிட்டு
கூடிடும் அடியார் ஆட்டிடவே
குமரா ஊஞ்சல் ஆடுகவே
பாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்
பண்பால் உயர்ந்தே வாழ்ந்திடவே
வாடிடும் பயிர்கள் வளம்பெறவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
முன்னே பின்னே சென்றாலும்
முளையில் ஒன்றி நின்றிடுமே
என்னே வாழ்க்கை என்றாலும்
எல்லாம் உன்னைச் சுற்றியதே
குன்றாக் குடியாய் எமையாக்கும்
குன்றக் குடியின் வடிவேலா
கண்ணே மணியே கதிர்வேலா
கவினார் ஊஞ்சல் ஆடுகவே.
விண்ணவர் செல்வி தெய்வானை
வேடவர் மகளாம் வள்ளியுடன்
மண்ணகம் சுற்றும் மயிலேறி
மகிமைச் சேவற் கொடியாட
கொண்டிடும் காதல் உணர்வோடு
கூடிய நெஞ்சத் தூஞ்சலிலே
அன்புடன் ஏறி இனிதமர்ந்தே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே.
மண்ணைப் பிளந்து பெரும்பேட்டில்
மாபெரும் அருளுடை வடிவுடனே
பெண்ணின் நல்லார் இருவருடன்
பெருமயில் ஏறி வந்தவனே
கண்ணே தெரியாக் காட்டிடையே
கலங்கித் தவிக்கும் எங்களுக்கே
தண்ணீர் மலையான் வழிகாட்டித்
தனிச்சீர் ஊஞ்சல் ஆடுகவே.