Skip to content
Samarvel
Home Songs
Images Chanting About Us Login

வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே

Vaanongu Thenpazhani Valarndhongum Mannavane

Add to favourites
Share
Show QR code
Download PDF
Meaning
Transliteration
Notes & Sources

வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே

தேனோங்கு செந்தமிழால் தினமோங்கத் தெண்டனிட்டோம்

மானோங்கு மாதருடன் மயிலேறும் வானவனே

வானோங்கும் செங்கதிரே வருவாய் இதுசமயம்,


கையிற் பழமேந்திக் கருத்தில் உனையேந்தி

மெய்யாக வழிபடுவார் மேலாக்கும் வேலவனே

வெய்யிலுக்கு விரிநிழலே வினைநீக்கும் மாமருந்தே

வையாபுரிநாடா வருவாய் இதுசமயம்,


மஞ்சாடும் மலைதோறும் மயிலேறும் வேலவனே

நெஞ்சாடும் கவலை எல்லாம் நீ தீர்க்க வேண்டுமையா

தஞ்சமென வந்தவரை தாயெனவே ஆதரிக்க

வஞ்சியரின் நாயகமே வருவாய் இதுசமயம்,


காளைத் தவிசேறும் கண்ணுதலான் கண்மணியே

பாளைச் சிரிப்பழகா பழனிமலை ஆண்டவனே

ஆளை அளக்காமல் அன்பை அளந்துடனே

வாளைபுரள் வாயா வருவாய் இதுசமயம்,


அப்பா எனக்கூவி அழைப்பதுவும் இப்புவியில்

தப்பேயா நான் கூறும் தமிழும் கசப்பதுவோ

ஒப்பாரும் இல்லாத ஓங்கார வேலவனே

சுப்பையா மயிலேறித் தோன்றிடுவாய் இதுசமயம்,


முல்லை மலர்போன்ற முத்துசிரிப்பழகா

எல்லை வருவோரின் இடர்தீர்க்கும் வேலவனே

கல்லானவன் மனமும் கனியாக்கி வைப்பதிலே

வல்லவனே வடிவேலா வருவாய் இதுசமயம்,


தெள்ளு தமிழுக்கும் தினைப்புனத்தில் கிளிபயிலும்

வள்ளி மயிலுக்கும் வசமாகி விட்டவனே

அள்ளூறிப் பாடிவரும் அடியவரின் மிடிதீர்க்கும்

வள்ளல் மனத்தரசே வருவாய் இதுசமயம்,


வானேறும் கற்புடைய மாதரசி தெய்வானை

கூனேறும் நெற்றிக்கே குழைந்துருகும் வேலவனே

தேனேறும் செந்தமிழால் தெண்டனிடும் மெய்யடியார்

வானேற வைப்பவனே வருவாய் இதுசமயம்,


மங்கை சிவகாமி மைந்தா வார்ந்தொழுகும்

கங்கை வளர்சடையான் கண்மணியே வடிவேலா

அங்கங் குழைந்துருகி அடிபரவும் அன்பரெனும்

வங்கக்கடல் நடுவே வருவாய் இதுசமயம்,


என்ன முருகா எழுந்துவரத் தாமதமேன்

சொன்ன தமிழில் சுவைகுறைவோ சொன்னவனும்

சின்னவனோ வள்ளி திசைமாற்றி விட்டாளோ

மன்னவனே குடிகாக்க வருவாய் இதுசமயம்,


பண்ணொழுகும் செந்தமிழாற் பாடிவரும் உன்னடியார்

கண்ணொழுக நிற்பதையும் கண்டுமனம் இரங்கலையோ

என்பிழை நானுடையேன் எப்படிநான் கூப்பிடுவேன்

வண்ணமயில் வாகனனே வருவாய் இதுசமயம்,


ஐயா திருக்குமரா அடியேன் கதறுவதும்

பொய்யோ நானுரைக்கும் புகழும் இகழாமோ

செய்யா சிந்தையிலே செழித்தோங்கும் தாமரையே

வையாபுரிக்கரசே வருவாய் இதுசமயம்,


கந்தா எனக்கதறும் கவிஉனக்கு கேட்கலையோ

சந்தையிலே நாய்போலத் தடிஏன் அலைவதுவோ

சிந்தாமணியே செல்வக்களஞ்சியமே

வந்தருளத் தாமதமேன் வருவாய் இதுசமயம்,


அஞ்சித் தலை குனிந்தும் அடிமைப்போல் வாய்புதைத்தும்

கெஞ்சி அழைத்தால் கேளாதோ உன் செவிக்கு

வஞ்சியரின் கண்வலையில் மானாகி விட்டாயோ

மஞ்சுலவு மலைநாடா வருவாய் இதுசமயம்,


பாடாத பாட்டெல்லாம் பாடி அழைத்தாலும்

ஆடாதிருப்பதுவோ அருளும் வறண்டதுவோ

வாடா மருக்கொழுந்தே மலைப்பழனி வேலவனே

வாடா என அழைத்தேன் வருவாய் இதுசமயம்,


கோவணத்தும் எழில்குலுங்கும் குழந்தைவடி வேலவனே

காவணம் போல் நிழல்கொடுக்கும் கருணைவடி வானவனே

பூவனத்தில் துள்ளிவரும் புள்ளிமயில் வாகனனே

வாய்ம்மணக்கக் கூவுகின்றேன் வருவாய் இதுசமயம்,


தீராநோய் தீர்த்தருளும் தென்பழனி மருத்துவனே

கூறாமல் குறைதீர்க்கும் குறிப்பறிந்த மன்னவனே

ஓராறு முகங்காட்டி ஓங்கார உருக்காட்டி

வாரா திருப்பதுவோ வருவாய் இதுசமயம்,


கல்லாப் பிழைகளையும் கற்றவர்கள் கற்றபடி

நில்லாப் பிழைகளையும் நெஞ்சுருகி உன்பெயரைச்

சொல்லாப் பிழைகளையும் சோதிவடி வானவனே

இல்லாப் பிழையாக்க வருவாய் இதுசமயம்,


எல்லாத்துறையினிலும் ஏமாற்றும் புனைசுருட்டும்

பொல்லாத சூரனைப்போல் புகுந்துவரும் இந்நாளில்

பொல்லாரும் மனந்திருந்திப் புத்தியிலே தெளிவுபெற

வல்லானே வேலெடுத்து வருவாய் இதுசமயம்,


சொல்லாலே மாலையிட்டு துணையடியில் தெண்டனிட்டு

நல்லாரும் நாட்டாரும் வழிநெடுக ஒலிமட்டும்

கல்லாய் இருப்பதுவோ கவலைகளைத் தீர்த்தருள

வல்லாய் திருக்குமரா வருவாய் இதுசமயம்,


தங்கநிற வேலவனே தமிழருந்தும் பாலகனே

சிங்கார வடிவேலவனே செந்தமிழைக் கேட்டுவைக்க

இங்குவர வேண்டுமென எல்லாரும் வேண்டுகிறோம்

மங்கையரின் காதலனே வருவாய் இதுசமயம்.

Vānōngu Thenpazhani vaḷarndhōngum mannavaṉē

Thēnōngu senthamizhāl dinamōngath theṇḍaniṭṭōm

Mānōngu mātharuḍan mayilēṟum vānavanē

Vānōngum sengathirē varuvāy idhusamayam.


Kaiyiṟ pazhamēndhik karuththil unaiyēndhi

Meyyāga vazhipaḍuvār mēlākkum vēlavanē

Veyyilukku virinizhalē vinainīkkum māmarundhē

Vaiyāpurināḍā varuvāy idhusamayam.


Manjāḍum malaithōṟum mayilēṟum vēlavanē

Nenjāḍum kavalai ellām nī thīrkka vēṇḍumaiyā

Thanjamena vandhavarai thāyenavē ātharikka

Vanjiyarin nāyagamē varuvāy idhusamayam.


Kāḷaith thavisēṟum kaṇṇudhalān kaṇmaṇiyē

Pāḷaich sirippazhagā Pazhanimalai āṇḍavanē

Āḷai aḷakkāmal anbai aḷandhuḍanē

Vāḷaipuraḷ vāyā varuvāy idhusamayam.


Appā enakkūvi azhaippadhavum ippuviyil

Thappēyā nān kūṟum thamizhum kasappadhuvō

Oppārum illādha ōngāra vēlavanē

Suppaiyā mayilēṟith thōnṟiḍuvāy idhusamayam.


Mullai malarpōnṟa mutthuchirippazhagā

Ellai varuvōrin idar thīrkkum vēlavanē

Kallānavan manamum kaniyākki vaippadhilē

Vallavanē vaḍivēlā varuvāy idhusamayam.


Theḷḷu thamizhukkum thinaippunaththil kiḷipayilum

Vaḷḷi mayilukkum vasamāgi viṭṭavanē

Aḷḷūṟip pāḍivarum adiyavarin miḍithīrkkum

Vaḷḷal manaththarasē varuvāy idhusamayam.


Vānēṟum kaṟpuḍaiya mātharasi Deivānai

Kūnēṟum neṟṟikkē kuzhaindhurugum vēlavanē

Thēnēṟum senthamizhāl theṇḍaniḍum meyyaḍiyār

Vānēṟa vaippavanē varuvāy idhusamayam.


Mangai Sivagāmi maindhā vārndhozhugum

Gangai vaḷarsaḍaiyān kaṇmaṇiyē vaḍivēlā

Angang kuzhaindhurugi aḍiparavum anbarenṟum

Vangakkaḍal naḍuvē varuvāy idhusamayam.


Enna Murugā ezhundhuvarath thāmadhamēn

Sonna thamizhil suvaikuṟaivō sonnavanum

Chinnavanō Vaḷḷi thisaimāṟṟi viṭṭāḷō

Mannavanē kuḍikākka varuvāy idhusamayam.


Paṇṇozhugum senthamizhāṟ pāḍivarum unnaḍiyār

Kaṇṇozhuga niṟpadhaiyum kaṇḍumanam irangalaiyō

Enpizhai nānuḍaiyēn eppaḍinān kūppiḍuvēn

Vaṇṇamayil vāgananē varuvāy idhusamayam.


Aiyā Thirukkumarā aḍiyēn kathaṟuvadhum

Poyyō nānuraikkum pugazhum igazhamō

Seyyā sindhaiyilē sezhiththōngum thāmaraiyē

Vaiyāpurikkarasē varuvāy idhusamayam.


Kandhā enakkathaṟum kavi unakku kēṭkalaiyō

Sandhaiyilē nāypōlath thaḍiyēn alaivadhuvō

Sindhāmaṇiyē selvakkaḷanjiyamē

Vandharuḷath thāmadhamēn varuvāy idhusamayam.


Anjith thalai kunindhum aḍimaippōl vāy pudhaiththum

Kenji azhaiththāl kēḷādhō un sevikku

Vanjiyarin kaṇvalaiyil mānāgi viṭṭāyō

Manjulavu malaināḍā varuvāy idhusamayam.


Pāḍādha pāṭṭellām pāḍi azhaiththālum

Āḍādhiruppadhuvō aruḷum vaṟaṇḍadhuvō

Vāḍā marukkozhundhē malaippazhani vēlavanē

Vāḍā ena azhaiththēn varuvāy idhusamayam.


Kōvaṇaththum ezhilkulungum kuzhandhaivaḍi vēlavanē

Kāvaṇam pōl nizhal koḍukkum karuṇaivaḍi vānavanē

Pūvanaththil thuḷḷivarum puḷḷimayil vāgananē

Vāymmaṇakkak kūvuginṟēn varuvāy idhusamayam.


Thīrānōy thīrththaruḷum Thenpazhani maruththuvanē

Kūṟāmal kuṟaithīrkkum kuṟippaṟindha mannavanē

Ōrāṟu mugangkāṭṭi ōngāra urukkāṭṭi

Vārā thiruppadhuvō varuvāy idhusamayam.


Kallāp pizhaigaḷaiyum kaṟṟavargaḷ kaṟṟapaḍi

Nillāp pizhaigaḷaiyum nenjurugi un peyaraich

Sollāp pizhaigaḷaiyum sōdhivaḍi vānavanē

Illāp pizhaiyākka varuvāy idhusamayam.


Ellāth thuṟaiyinilum ēmāṟṟum punaisuruṭṭum

Pollādha Sūranaippōl pugundhuvarum innāḷil

Pollārum manandhirundhip putthiyilē theḷivupeṟa

Vallānē vēleḍuththu varuvāy idhusamayam.


Sollālē mālaiyiṭṭu thuṇaiyaḍiyil theṇḍaniṭṭu

Nallārum nāṭṭārum vazhineḍuga olimaṭṭum

Kallāy iruppadhuvō kavalaigaḷaith thīrththaruḷa

Vallāy Thirukkumarā varuvāy idhusamayam.


Thanganiṟa vēlavanē thamizharundhum pālaganē

Singāra vaḍivēlavanē senthamizhaik kēṭṭuvaikka

Inguvara vēṇḍumena ellārum vēṇḍuginṟōm

Mangaiyarin kādhalanē varuvāy idhusamayam.

இந்தப் பாடலில் பக்தர் தென்பழனியில் அருள்புரியும் முருகனை அன்புடன் அழைக்கிறார். வேலவனாகவும், மயில்வாகனனாகவும், வள்ளி மற்றும் தெய்வானையின் மணாளனாகவும், சிவபெருமானின் மகனாகவும் முருகன் போற்றப்படுகிறார். அவனது திருவருள் வெயிலில் கிடைக்கும் பெருநிழலைப் போலவும், வினைகளையும் தீராத நோய்களையும் போக்கும் மாமருந்தைப் போலவும் வர்ணிக்கப்படுகிறது.


பக்தனின் மனக்கவலை, துன்பம், பிழைகள் அனைத்தையும் நீக்கி அருளுமாறு முருகனிடம் உருக்கமாக வேண்டப்படுகிறது. “நான் இவ்வளவு அழைத்தும் ஏன் இன்னும் வரவில்லை?” என்ற நெருக்கமான பக்தி உணர்வு பல சரணங்களில் வெளிப்படுகிறது. இறுதியில் உலகில் நிலவும் ஏமாற்றம் மற்றும் தீமைகள் நீங்கி மக்களின் மனத்தில் தெளிவு பிறக்க, வேலுடன் வந்து அருள்புரிய வேண்டும் என்று வேண்டி, அனைவரின் சார்பிலும் “வருவாய் இதுசமயம்” என்று அழைக்கிறது.

This devotional hymn is an intimate appeal to Lord Murugan of Palani. Murugan is praised as the bearer of the Vel, the rider of the peacock, the beloved of Valli and Deivanai, and the divine son of Shiva. His grace is portrayed as a vast shade from the burning sun and as a great medicine capable of removing karma, suffering and illness.


The devotee repeatedly asks why Murugan delays when he is being called with such love and longing. He seeks relief from anxiety, mistakes, suffering and confusion, while also praying for clarity and transformation of the heart. The recurring refrain, “Varuvāy idhusamayam”, literally “Come, this is the time”, gives the hymn its emotional centre: an immediate and deeply personal invitation for Murugan to appear, protect and bestow grace.

Notes & Sources

“வானோங்கு தென்பழனி வளர்ந்தோங்கும் மன்னவனே” என்பது பழனிமலை முருகனை நேரடியாக அழைத்து அருள் வேண்டுகின்ற பக்திப் பாடல். ஒவ்வொரு சரணமும் “வருவாய் இதுசமயம்” என்ற உருக்கமான வேண்டுதலுடன் நிறைவடைகிறது. இதனால் பாடல் முழுவதும் முருகனைத் தூரத்தில் இருக்கும் தெய்வமாக அல்லாமல், பக்தனின் அழைப்பைக் கேட்டு இப்போதே வந்து துணைநிற்க வேண்டிய இறைவனாகக் காணும் பாவனை வலுப்பெறுகிறது.


பழனி, வையாபுரி, வேல், மயில், வள்ளி, தெய்வானை, ஆறுமுகம், ஓங்காரம் போன்ற முருக வழிபாட்டின் பல அடையாளங்கள் பாடலில் ஒன்றிணைகின்றன. கவலை, நோய், வினை, பிழை ஆகியவற்றிலிருந்து விடுதலை வேண்டுவதுடன் மனத்தெளிவு மற்றும் இறையருளையும் பாடல் வேண்டுகிறது. வழங்கப்பட்ட மூலத்தில் ஆசிரியர் குறித்த தகவல் குறிப்பிடப்படாததால் ஆசிரியர் பெயர் சேர்க்கப்படவில்லை.